புதன், 8 ஜூலை, 2015

அன்புடை நெஞ்சம்

யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார் (குறுந்தொகை - 40)

பொருள் விளக்கம்: 

  1. யாய்=தாய்
  2. ஞாய்=தாய்
  3. எந்தையும் நுந்தையும்= என் தந்தையும் உன் தந்தையும்
  4. செம்புலம்=செம்மண் நிலம்
  5. பெயல்நீர்=மழை 

"உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. ஆயினும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் பாலை நிலத்தில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன".

வெள்ளி, 20 மார்ச், 2015

ஆண்டவன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
                 
                                              - கண்ணதாசன்

சனி, 10 ஜனவரி, 2015

கருவித்தவன்


அணுக்கள் பல சேர்ந்து
பரிணாமங்கள் பல கடந்து

அண்டம் முதல்
பிரமாண்டம் பல நிகழ்த்தும் 'ஆறாம் அறிவு' வரை
அனைத்தும் 'தானாய்' நடந்தேறிட
இன்று நடந்திடும் நாடகம் மட்டும்
'நம்மின்' செயலோ?

என்னுள் சிந்தனையை கருவித்தவன் எவனோ
நான் அறியேன்
அது பரம்பொருளோ டார்வின் உரைத்த பரிணாமமோ
நான் அறியேன்
ஆனால் அவனே என்னை ஆள்கிறான்
என் எண்ணமாக என் விருப்பமாக
என் அறிவாக என் நம்பிக்கையாக

அவனை (என்னை) அறியாது விடமாட்டேன்
ஐய்யமில்லை எனக்கு
கேள்விகள் எங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே
பதிலும் வரும் எனும் பொறுமையுடன்!!!!