புதன், 23 நவம்பர், 2016

வேர்ல்ட் பீஸ்

வெடிகுண்டுகள் -இன்றைய
இயந்திரப் புறாக்கள் சுமந்து செல்லும் அமைதி  

ஞாயிறு, 6 நவம்பர், 2016

சொல்லதிகாரம்-கவிஞர் வைரமுத்து

‘கொல்’ ‘கொள்ளையடி’
சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”தழுவு” ”முத்தமிடு”
கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”ஆராரோ” ”சனியனே”
தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”உனக்கெப்போது கல்யாணம்?”
விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”உருப்படு” – உருப்படமாட்டாய்”
வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”இன்னொரு ஜென்மம்
என்றொன்றிருந்தால்”
பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”கடைசியாய் எல்லாரும்
முகம்பார்த்துக் கொள்ளுங்கள்”
மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”சவால் விடுகிறேன் – சபதம் செய்கிறேன்’
மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

‘பாலாறு – தேனாறு’
பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”மறக்காமல் கடிதம் போடு”
ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”அய்யா குளிக்கிறார்”
தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்

‘அப்பா கோபமாயிருக்கிறார்’
குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

‘தயவுசெய்து’ – ‘மன்னியுங்கள்’
ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்

”நேற்றே வந்திருக்கக் கூடாதா”
கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்

‘இனிமேல் ஆண்டவன் விட்ட வழி’
மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்


போதுமடா சாமி!
போதும்! போதும்!

ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்

இனி ஒவ்வொரு சொல்லையும்
ஒட்டடை தட்டுவோம்

இனிமேல் வார்த்தைகளை
இடம் மாற்றிப் போடுவோம்

அத்தனை சொல்லிலும்
ஆக்சிஜன் ஏற்றுவோம்

வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்


முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்

வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்

மரித்தான் என்ற சொல்லை யெறிந்து
வாழ்வை வென்றான் என்று புகழ்வோம்

தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து
விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்

எதிரி என்ற வார்த்தை எதற்கு?
தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்

சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்
முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்

இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்
அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்

நொந்த தேகம் நோயில் விழுந்தால்
உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்

வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்
மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்

நிலவைத் தொலைத்த வானம் என்பதை
விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்

எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

அமைதி



சந்தையில் கிடைக்காது
சிந்தையில் நிலையாது
அகந்தையின் அனுகாது

நித்திரைக்கு எஜமானன்
சத்தியத்திற்க்கு சமதோழன்
நித்தியத்துக்கு வழிகாட்டி

நதிகளின் சங்கமம்
கடலில் ஏது அந்த நதிகள்
தன்னிலை இழந்துவிட்ட மழை நீர்த் துளிகள்

குழந்தையின் உள்ளம்
இளமையின் எள்ளல்
முதுமையின் தேடல்
சாவின் ருசி…

திங்கள், 5 செப்டம்பர், 2016

அறம் வாழட்டும்

Image result

அறம் பொருள் இன்பம்
வகுத்தான் வள்ளுவன்

பொருளும் இன்பமும் கிழக்கே பயணித்திட
அறம் மட்டும் 'ஏனோ' அறுபட்டு போனது

பொருள் ஈட்ட அறம் துறக்கிறோம்
இன்பம் காண அறமும் பொருளும் துறக்கிறோம்

துறவியரும் துறக்க அஞ்சும்
அறத்தையும் எளிதே துறக்கும் நாம்
மகா துறவியரோ!!!

துறவியாக வாழ்ந்தது போதும் - அறத்தின்மீது
மோகம் கொண்ட போகியாக வாழ்வோமாக!!!

புதன், 31 ஆகஸ்ட், 2016

காளமேகரின் புலமை

காளமேகம் கடற்கரையோர நாகப்பட்டினம் காத்தான் சத்திரத்தில் பசியோடு காத்திருந்தார். சாப்பாடு ஒரேயடியாகத் தாமதம் ஆனது. ஒரு வழியாக சாப்பாடு பரிமாறப்பட்டு அவர் சாப்பிட்டும் முடித்தார். காளமேகத்தின் பெருமை அறிந்த சாத்திரப் பொறுப்பாளர் அவரை ஒரு பாடல் பாடச் சொன்னார்.

           கத்துகடல் சூழ் நாகைக் காத்தான் சத்திரத்தில்
           அத்தமிக்கும் போதில் அரிசி வரும்; குத்தி
           உலையிலிட ஊரடங்கும்;ஓரகப்பை அன்னம்
           இலையிலிட வெள்ளி முளைக்கும்

என்று பாடினார்.

அத்தமிக்கும் – சூரிய அஸ்தமனம்
ஊரடங்கும் – எல்லாரும் உறங்கிப் போவார்கள்
வெள்ளி முளைக்கும் – விடிந்து விடும்

சத்திரப் பொறுப்பாளருக்கு வருத்தம். “அன்னமிட்டோர் உள்ளம் நோக பாடுதல் முறையா?” என்று வருத்தமாகக் கேட்டார். காளமேகம் அவரது பாடலுக்குச் சொன்ன விளக்கம் :

அத்தமிக்கும் போதில் அரிசி வரும் என்றால், பஞ்சத்தில் எல்லா இடத்திலும் அரிசி அத்தமித்தாலும் (மறைந்தாலும்) காத்தான் சத்திரத்துக்கு அரிசி வரும். அதை அள்ளி உலையிலிடும் போதே அந்த நல்லெண்ணத்தில் ஊரின் பசி அடங்கும். ஒரு கரண்டி சோறு இலையில் வைத்ததும் பளீரென்று வெள்ளி நிறமாக ஜொலிக்கும்.

சத்திரப் பொறுப்பாளர் சாந்தமானார். அங்கதச் சுவை நிறைந்த பாடல் இது.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

நாத்திகம் போற்றாதே



நாத்திகம் நாடாதே நண்பா
உயர் கடவுள் படைத்திடும் வழி
ஒன்று உண்டு காணீர்

அன்பின் உச்சம் அகத்தே உயிர்த்து
பண்பின் வழி அதை 'பார்'க்கு கொடுத்து

அடையாளம் யாவும் 'அவிந்து' உடைத்து
உண்மைக்கு உருவம் நல்கும்
அறவோன் யாவனும் 'இறைவனே'

எது இழிவு

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.
------------------------------------------------

பொருல்: ஒருவர் ஒரு பொருளைத் தருக என்று மற்றொருவரிடத்தில் இரத்தல் என்பது இழிவான செயலாகும்! அவ்வாறு இரந்தோர்க்கு யாதொரு பொருளையும் தரமாட்டேன் என்று மறுத்துக் கூறுதல் என்பது, மேற்குறிப்பிட்ட இழிவைக் காட்டிலும், மிகவும் இழிவான ஒரு செயலாகும்.

அதே போல் பிறர்க்கு கொடுப்பது சிறப்பானது; அதை பெருந்தன்மையாக மறுத்தல் அதனினும் சிறப்பு.

இங்கு 'அன்று' என்பது 'இல்லை' எனும் பொருளில் வரவில்லை. ஒரு அசைச் சொல்லாக வந்துள்ளது

வெள்ளி, 15 ஜனவரி, 2016

யாவும் வேணும்




சுழலும் உலகில் நிலையான நிலை வேணும்
சிதறும் எண்ணங்களில் சிதையாத மனம் வேணும்

ஏற்பது எதுவாயினும் அது அதிகம் வேணும்
கிடைப்பது யாவும் எளிதில் வேணும்

இன்பத்தில் நிதானம் வேணும்
துன்பத்தில் பொறுமை வேணும்

கொடுக்க பொருள் வேணும்
கொடுத்தன மறந்திட வேணும்

அகத்தால் தூய்மையுற வேணும்
கசந்தாலும் உண்மை போற்றிட வேணும்

திரியாத கொள்கை வேணும் -அதில்
துவண்டாது முயன்றிட வேணும்

மாறாத பாசம் வேணும் -அதை
நான் திகட்டாது தந்திட வேணும்

இனியவை போற்றிட வேணும் 
உகந்தவை செய்திட வேணும்

பகைமை மன்னிக்கும் வீரம் வேணும்
காழ்ப்பு கொள்ளாத சால்பு வேணும்

உதிரம் உறைந்து போயினும்
இழகாத உணர்வு வேணும்
வேண்டியவை யாவும் கிடையாத போதும்
சளையாத முயற்சி வேணும்