புதன், 26 மார்ச், 2014

மீள்வேனோ


விண்ணில் மறைந்த நிலவை உன் 
கண்ணில் தேடினேன் 
உன்னில் தொலைந்த என்னை 
நான் என்னில் தேடினேன் 

நாணம் நிறைந்த பாவை உன் முகம் 
தவிர்த்து ஏனைய எல்லாம் மறந்தேன் 
சிந்தனை செய்து பார்த்தேன் 
அந்த விந்தை எனக்கு விளங்கவில்லை 

உன் கண்ணில் கரைந்த நான் 
இம்மண்ணில் புதையும் முன்னேனும் 
மீள்வேனோ!!!!!!!!

ஞாயிறு, 23 மார்ச், 2014

நீர்ப்பறவை

தாமரை குளத்து நீர்பறவையது மனித வாழ்கை
இலையின் மீது திரியும் வாழ்கை

பறந்து செல்லலாம்
இறகின் உண்மை அறிந்தால்
நடந்து செல்லலாம்
மனதின் எடை "இலை" தாங்குமேன்றால்
மிதந்தும் பிழைக்கலாம்
எல்லாம் இழந்தும் உயிர்ப்பற்று இருப்பின்

மூழ்கி இறக்கத்தான் வேண்டும்
இறகு மறந்து இலை இழந்து
மனதும் வற்றி விடின்

சனி, 15 மார்ச், 2014

வேலை

வேலை அலுப்பில் கொஞ்சம் அயர்ந்துதான் போனேன்
அக்கம் பக்கம் பார்த்தேன்
பின்ன ஆகாயமா பார்க்க முடியும்
இந்த நவீன கூண்டில்

கணினியின் கண்கள் என்னையே பார்த்து கொண்டிருக்க
என் கண்கள் சிறிது பசுமை தேடியது
தலை சிறுது கனத்தது
தேநீர் குடிச்சா ‘fresh’ ஆகுமாசிந்தித்தேன்

காதல் முதல் களிப்பு வரை
எல்லாம் கணினி தான் என்பதை நினைத்து அங்கலாய்த்து கொண்டே
உற்ற நண்பர் நான்கு பேருக்கு ‘ping’ செய்து அழைப்பு விடுத்தது விட்டு
கிளம்பும் வேளையில்
கணினியில் இருந்து சத்தம் ‘reminder: meeting in 5 mins’

செவ்வாய், 11 மார்ச், 2014

அப்பாவும் தாத்தாவும்....

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பெண்ண சரியேன்ன எப்போதும் விளையாது
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே
                                                                                 -கண்ணதாசன்

தர்மம்

தினக்கூத்துகளில்,
ஊணில் உயிர் தொலைத்து, பொய்யில் உறவு வளர்த்து
வெறும் உயர் அஃறிணையாய் திரியும் நமக்கு,
கிஞ்சித்தும் மனிதம் மீதம் இருந்தால்,
இந்த "தர்மம்" புரியும்... புரியட்டும்...:(
                                                     -ராகுல்(எனது சகோதரன்)

பரஸ்பரம்

பண்டிகைக்கு முதல் நாள்
குழந்தைக்குப் புத்தாடை வாங்க
பணம் கேட்பவன்
குழந்தைக்கு உடல் நலமில்லை
எனப் பொய் சொல்கிறான்

கடவுள் அவனை
கொஞ்சம் மன்னிக்கிறார்
அவனும் கடவுளை
கொஞ்சம் மன்னிக்கிறான்
              -மனுஷ்ய புத்திரன்(இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்)

புதன், 5 மார்ச், 2014

கண்ணீர்

உன்னை முதல் முறை பார்த்த பொழுது என் நெஞ்சம் வியர்த்தது
-கல்லுகுள் ஈரமாய் !
மறுமுறை பார்த்த பொழுது என் முகம் வியர்த்தது
-ஏனென்று புரியவில்லை !!
மூன்றாம் முறை என் கண்கள் வியர்த்தது
உன்னை காணாத என் கண்கள்.............வியர்த்தது
-வலியின் கண்ணீராய் !!!

செவ்வாய், 4 மார்ச், 2014

வானவில்

சாரல் மழை என்னை நனைத்தது
அவள் மழலை குரல் என் மனதை நனைத்தது
மின்னலாய் ஒளி வீசி தென்றலாய் என் தேகம் தொட்டு
ஜன்னலின் ஓரம் அவள் பிம்பம் தெரிய
வானவில்லின் கீற்றோ என என்ணி வியக்க
இல்லை இவள் கம்பன் கூற்றனெ மதி உரைக்க
காதலின் ஐயத்தில் வியர்வை வெள்ளத்தில்
என் தூக்கம் கலைந்தது

வலி

உயிர் பிறக்கும் வலி
அது கணப்பொழுது
உயிர் பிரியும் வலி
அது நொடிப்பொழுது
உயிர் சேரா வலி
அது யுக யுகமாய்!!!!

இல்லாமை

வாழ்வின் பொருள் கண்டவன்
பொருளில் வாழ்வை தேடுவதில்லை 
தன்னை உணர்ந்தவன் -பிறர் 
பிழை பார்ப்பதில்லை

காலத்தின் இயல்பு அறிந்தவன்
சுகதுக்கம் அடைவதில்லை
இல்லாமை வலி உணர்ந்தவன்
இல்லை என்று உரைப்பதில்லை
தேடல் உள்ளம் கொண்டவன்
அயர்வு அடைவதில்லை

உண்மை தேடும் மனம் 
முகமூடி அணிவதில்லை
உலகின் நிலையின்மை கண்டவன்
கர்வம் கொள்வதில்லை
மனித வாழ்வின் இயற்கை அறிந்தவன்
சிறியோர் பெரியோர் பேதம் சொல்வதில்லை