செவ்வாய், 7 அக்டோபர், 2014

அசகாய சக்தி



கிரகனாதி கிரகனங்கட்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆள் ஒரு பொழிப்புரை கிறுக்கியும் ஆருக்கும் விளங்காததாம்..
அதைப் பயந்ததை உணர்ந்ததை துதிப்பதுவன்றி...
பிறிதேதும் வழி இல்லையாம்
நாம் செய்த வினையெல்லாம் முன்செய்தது என்றது
விதி ஒன்று செய்வித்ததாம்
அதை வெல்ல முனைவோரை சதி கூட செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாக செவிடாக மலடாக முடமாக
கருசேற்கும் திருமூலமாம்
குஷ்ட துஷ்யம் புற்று சூலை மூலம்என்ற
க்ரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின்
புது சென்மம் தந்தருளுமாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்பததன்
வாடிக்கை விளையாடலாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதனின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணி தந்து அது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரை பிளந்ததுபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்க்கருளிடும்
பரிவான பரப்ரம்மமே

உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமாறு தொழுசக்தியை
மற்றவர் வையுபயம் கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்றுகொள்
ஆகமக்குளம் மூழ்கி மும்மலம் கழி அறிவை
ஆத்திக சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தியை
தையடா ஊசியில் தையென தந்தபின்
தக்கதை தையாதிரு
உய்திடும் மெய்வழி உதாசீனத்தபின்
நைவதே நன்றெனின் நை"

- கமலஹாஷன் 

செவ்வாய், 8 ஜூலை, 2014

நான் மனிதன்

                    

தவறுகள் ஆயிரம் இழைக்கிறேன் -ஆயினும்
அறம் மேற்கொள்ள துடிக்கிறேன்…ஏன்...நான் மனிதன்!!

வருந்தியதால் திருந்தி அவ்வருத்தம் போனபின்
திருத்தம் திருத்தும் நான் மனிதன்

மனத்தால் கணமும் துன்பம் உருவகித்து
மதியால் மீள முயலும் நான் மனிதன்

சிந்தை தந்த அகந்தையில் உலகின்
விந்தை மறந்த நான் மனிதன்

பணிவாய் உள்ளதை நினைத்து
கர்வம் கொள்ளும் நான் மனிதன்

இன்பமாய் வாழ துன்பம் கொண்டும் - அத்துன்பத்தின்
நடுவில் இன்பம் தேடும் நான் மனிதன்

மிருக குணங்கள் கொண்டினும் 'அகம் பிரம்மாஸ்மி'
என்பதை உணர விரும்பும் நான் மனிதன்

நான் எனும் எண்ணம் கொன்ற என்னை
நின்று தேடும் நான் மனிதன்

பாவம் செய்பவன் பாவி
யோகம் கடந்தவன் யோகி
மத்தியில் தவிக்கிறேன் நான் மனிதன்


ஞாயிறு, 15 ஜூன், 2014

அன்பே சிவம்

           
காசிக்கு யாத்திரையாம் கங்கையிலே தர்ப்பணமாம்
காசுபணம் கையிருந்தால் சடங்குகளாம் வேள்விகளாம்
கடவுளெலாம் கடவுள்தேடி பலவிடங்கள் அலைகின்றார்
அன்புசெய்ய பழகிவிட்டால் அவரவர் புரிந்துகொள்வார்
                    -கோகுலன்(முகம் தெரியாதஇணையதள நண்பர்)

ஞாயிறு, 18 மே, 2014

தென்பாண்டி சிங்கம்

வருகுதையா மறவர் படை
வானவில் சேனைத்தளம்
மறவனோட எதிராளி மாண்டவர் கோடி லட்சம்
கையிலே வீச்சருவாள்
காலிலே வீர தண்டை
நெற்றியில் பொட்டு வைத்து
நீல வண்ண பட்டுடுத்தி
தோளே வாளான துடியான வீரனடா

தென்பாண்டி சிங்கமடா
தேன் தமிழ் பாடும் தங்கமடா
வரி புலியின் வர்க்கமடா
அந்த வரியோரின் சொந்தமடா
படை நடுங்கும் தோள்களடா
இந்த பகைவரின் மனமும் பதைக்குமடா
வைரம் பாஞ்ச நெஞ்சமடா
இவன் வாள் எடுத்தால் வரும் வாகையடா
                                                          [தென் பாண்டி ]

இருநூறு வருஷம் முன்னே இனம் மானம் காத்தவன்டா
வெள்ளை இருட்டை வெளியே விரட்டி அடிச்சவன்டா
                                                               [இருநூறு வருஷம்]
உமை துரைக்கு தான் உற்ற நண்பனாம்
சீமை துரைகளுக்கு அவன் சிம்ம சொப்பனம்
                                                          [தென் பாண்டி ]    
கை வளரி வீசி விட்டால் கைலாசம் கலங்குமடா
வேல் கம்பு விட்டெறிந்தால்
வெண்ணிலவில் தைக்குமடா
வானத்தை கீறி உனக்கு வைகரைய பரிசளிப்பான்
மானம் காக்கும் மறவனடா
நம்ம மருது பாண்டியர் தோழனடா
                                                    [தென் பாண்டி ]
-------------------------------------------------------------------------
தென்பாண்டி சிங்கம் என்ற தொலைக்காட்சி தொடரின்
பாடல் .எழுதியவர் கலைஞர் கருணாநிதி
இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்து
அவரே பாடிய பாடல்.

 



புதன், 14 மே, 2014

எக்காலம்?

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?

ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப்பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்?

வம்படிக்கும் மாந்தருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல ஆவதினி எக்காலம்?

பற்றற்று நீரில்படர் தாமரை இலைபோலே
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்?
                                                                       -சித்தர் பாடல்

வியாழன், 8 மே, 2014

இன்னல்கள்

இன்னல்கள் கடல் அலைகளாக
அதனுள் நம்மை இழுத்திட பார்க்கும்
காலின் உறுதி குலைக்கும்

காலூன்றி மனதூன்றி பொறுத்தல் போதும்
வந்த வழி திரும்பிச் செல்லும் அந்த 'அலைகள்'
பயணம் தொடரலாம் கரையை நோக்கி

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

உன்னாலே

தூக்கத்தில் கணவாய் வருகிறாய்
விழித்திருக்கையில் தீயாய் சுடுகிறாய்
கண் மூடியதும் காட்சியாய் தோன்றுகிறாய்
நெஞ்சுக்குள் கானமாய் பொழிகிறாய்
அது ஏனோ அது ஏனோ

முகப் புத்தகம் நூறு முறை பார்கிறேன்
உன் முகத்தை ஒரு முறையேனும் பார்த்திட துடிக்கிறேன்
தொலைவில் வருவது நீயாக இருக்காத என தவிக்றேன்
அது ஏனோ அது ஏனோ

இரவில் தூக்கம் இழக்கிறேன்
பகலில் என்னை தொலைக்கிறேன்
காதல் வந்ததா தெரிய வில்லை ஆனால் கவிதை வந்தது
உன்னாலே அது உன்னாலே.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

முரண்படும் ஆசைகள் ஆயிரம்

ஆசைகள் ஆயிரம்!
ஆசைகள் இம்சைகள் ஆனா போதிலும்!!
ஆசைகள் ஆயிரம்!!!

சுற்றம் சூழ வாழ ஆசை 
யாரும் இல்லா தனி தேசம் செல்லவும் ஆசை

சிறகுகள் இன்றி பறந்திட ஆசை
சிற்பமாய் உறைந்திடவும் ஆசை

பில்கேட்ஸாய் உலகம் வாங்க ஆசை
பட்டினத்தார் போல் பாடித் திரிந்திடவும் ஆசை 

நாசா சென்று விஞ்ஞானி ஆக ஆசை
காசி சென்று மெய்ஞானி ஆகவும் ஆசை

கோபியர் கொஞ்சும் கண்ணனாக ஆசை
கம்பர் பாடும் ராமனாக வாழவும் ஆசை

தமிழ் மொழிக்காக பிற மொழியுடன் வாதிட ஆசை
பிற மொழிக்காக தமிழ் மொழியை விடச்செய்யவும் ஆசை

ஆயிரம் களிறு கொன்ற பரணியாக வீறுகொள்ள ஆசை
தரணி வென்ற புத்தனாக சாந்தம் கொள்ளவும் ஆசை

ஊன் சுவைத்து ஊன் வளர்க்க ஆசை
உயிர் மதித்து ஊன் துறக்கவும் ஆசை

ஆசைகள் அனைத்தும் அடைந்திட ஆசை
ஆசைகள் அனைத்தும் துறந்திடவும் ஆசை

சித்தன் முதல் பித்தன் வரை
ஆசையின் பரிணாமங்கள் தான் வேறாகிறது
அந்த வேர் என்றும் மண்ணிலே நிலைகிறது

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

புறநானூறு

உண்டால் அம்ம, இவ்வுலகம் – இந்திரர்;
அமிழ்தம் இயைவது ஆயினும், ‘இனிது’ எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின்; உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே
                              -இளம்பெரு வழுதி
---------------------
நம்மில் பலர் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் புறநானூறு பாடலை கடந்து வந்திருப்போம். இப்பாடலும் அந்த செய்யுளில் இடம் பெற்ற ஒன்றாகும்,

பாடலின் பொருள்:
தன்னலம் துறந்து வாழ்பவர்கள் இந்திரனின் தேவாமுதம் போன்ற கிடைப்பதற்கரிய பொருள் கிடைத்தாலும் கூடத் தனக்கென மட்டுமே பதுக்கி,ஒதுக்கி வைத்துக் கொள்ளாதவர்களாகப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள்.

யாரையும் அவர்களால் வெறுக்கவோ,பகையாளிகளாக ஆக்கிக் கொள்ளவோ முடியாது. எவருமே செய்ய அஞ்சக் கூடிய பழிச் செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாமல் இருப்பதோடு, அவற்றுக்குத் தீர்வு காணக் கூடிய செயல்களில் மனச் சோர்வும் சலிப்பும் கொள்ளாமல் தொடர்ந்து இயங்குவர்.

புகழுக்காகத் தங்கள் உயிரையையும் கொடுக்கத் துணியும் அவர்கள் பழி வருமெனின் உலகையே பரிசாகத் தந்தாலும் அப்படி ஒரு செயலைச் செய்யத் துணியாதவர்கள். மனதை எந்த வகையான சஞ்சலங்களுக்கும்,உளைச்சல்களுக்கும் ஆட்படுத்திக் கொள்ளாதவர்களாக-எடுத்த காரியம் வெற்றியுடன் முடிய வேண்டுமென்ற ஒற்றை இலக்குடன் மட்டுமே உறுதியுடன் இயங்குவர். தனது முயற்சிகளை,சக்திகளைப் பிறருக்காகவே அர்ப்பணித்து வாழும் அத்தகைய மாண்பிற்குரியாளர்களால்தான் உலகம் சுழல்கிறது என்கிறது பாடல்

புதன், 26 மார்ச், 2014

மீள்வேனோ


விண்ணில் மறைந்த நிலவை உன் 
கண்ணில் தேடினேன் 
உன்னில் தொலைந்த என்னை 
நான் என்னில் தேடினேன் 

நாணம் நிறைந்த பாவை உன் முகம் 
தவிர்த்து ஏனைய எல்லாம் மறந்தேன் 
சிந்தனை செய்து பார்த்தேன் 
அந்த விந்தை எனக்கு விளங்கவில்லை 

உன் கண்ணில் கரைந்த நான் 
இம்மண்ணில் புதையும் முன்னேனும் 
மீள்வேனோ!!!!!!!!

ஞாயிறு, 23 மார்ச், 2014

நீர்ப்பறவை

தாமரை குளத்து நீர்பறவையது மனித வாழ்கை
இலையின் மீது திரியும் வாழ்கை

பறந்து செல்லலாம்
இறகின் உண்மை அறிந்தால்
நடந்து செல்லலாம்
மனதின் எடை "இலை" தாங்குமேன்றால்
மிதந்தும் பிழைக்கலாம்
எல்லாம் இழந்தும் உயிர்ப்பற்று இருப்பின்

மூழ்கி இறக்கத்தான் வேண்டும்
இறகு மறந்து இலை இழந்து
மனதும் வற்றி விடின்

சனி, 15 மார்ச், 2014

வேலை

வேலை அலுப்பில் கொஞ்சம் அயர்ந்துதான் போனேன்
அக்கம் பக்கம் பார்த்தேன்
பின்ன ஆகாயமா பார்க்க முடியும்
இந்த நவீன கூண்டில்

கணினியின் கண்கள் என்னையே பார்த்து கொண்டிருக்க
என் கண்கள் சிறிது பசுமை தேடியது
தலை சிறுது கனத்தது
தேநீர் குடிச்சா ‘fresh’ ஆகுமாசிந்தித்தேன்

காதல் முதல் களிப்பு வரை
எல்லாம் கணினி தான் என்பதை நினைத்து அங்கலாய்த்து கொண்டே
உற்ற நண்பர் நான்கு பேருக்கு ‘ping’ செய்து அழைப்பு விடுத்தது விட்டு
கிளம்பும் வேளையில்
கணினியில் இருந்து சத்தம் ‘reminder: meeting in 5 mins’

செவ்வாய், 11 மார்ச், 2014

அப்பாவும் தாத்தாவும்....

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பெண்ண சரியேன்ன எப்போதும் விளையாது
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே
                                                                                 -கண்ணதாசன்

தர்மம்

தினக்கூத்துகளில்,
ஊணில் உயிர் தொலைத்து, பொய்யில் உறவு வளர்த்து
வெறும் உயர் அஃறிணையாய் திரியும் நமக்கு,
கிஞ்சித்தும் மனிதம் மீதம் இருந்தால்,
இந்த "தர்மம்" புரியும்... புரியட்டும்...:(
                                                     -ராகுல்(எனது சகோதரன்)

பரஸ்பரம்

பண்டிகைக்கு முதல் நாள்
குழந்தைக்குப் புத்தாடை வாங்க
பணம் கேட்பவன்
குழந்தைக்கு உடல் நலமில்லை
எனப் பொய் சொல்கிறான்

கடவுள் அவனை
கொஞ்சம் மன்னிக்கிறார்
அவனும் கடவுளை
கொஞ்சம் மன்னிக்கிறான்
              -மனுஷ்ய புத்திரன்(இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்)

புதன், 5 மார்ச், 2014

கண்ணீர்

உன்னை முதல் முறை பார்த்த பொழுது என் நெஞ்சம் வியர்த்தது
-கல்லுகுள் ஈரமாய் !
மறுமுறை பார்த்த பொழுது என் முகம் வியர்த்தது
-ஏனென்று புரியவில்லை !!
மூன்றாம் முறை என் கண்கள் வியர்த்தது
உன்னை காணாத என் கண்கள்.............வியர்த்தது
-வலியின் கண்ணீராய் !!!

செவ்வாய், 4 மார்ச், 2014

வானவில்

சாரல் மழை என்னை நனைத்தது
அவள் மழலை குரல் என் மனதை நனைத்தது
மின்னலாய் ஒளி வீசி தென்றலாய் என் தேகம் தொட்டு
ஜன்னலின் ஓரம் அவள் பிம்பம் தெரிய
வானவில்லின் கீற்றோ என என்ணி வியக்க
இல்லை இவள் கம்பன் கூற்றனெ மதி உரைக்க
காதலின் ஐயத்தில் வியர்வை வெள்ளத்தில்
என் தூக்கம் கலைந்தது

வலி

உயிர் பிறக்கும் வலி
அது கணப்பொழுது
உயிர் பிரியும் வலி
அது நொடிப்பொழுது
உயிர் சேரா வலி
அது யுக யுகமாய்!!!!

இல்லாமை

வாழ்வின் பொருள் கண்டவன்
பொருளில் வாழ்வை தேடுவதில்லை 
தன்னை உணர்ந்தவன் -பிறர் 
பிழை பார்ப்பதில்லை

காலத்தின் இயல்பு அறிந்தவன்
சுகதுக்கம் அடைவதில்லை
இல்லாமை வலி உணர்ந்தவன்
இல்லை என்று உரைப்பதில்லை
தேடல் உள்ளம் கொண்டவன்
அயர்வு அடைவதில்லை

உண்மை தேடும் மனம் 
முகமூடி அணிவதில்லை
உலகின் நிலையின்மை கண்டவன்
கர்வம் கொள்வதில்லை
மனித வாழ்வின் இயற்கை அறிந்தவன்
சிறியோர் பெரியோர் பேதம் சொல்வதில்லை